பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



என் கனவு

தூங்கிய பின்னும் முகங்கொடுத்து
தூங்கிய என்னை உன்
மடி அமர்த்தினாய்
பஞ்சு மெத்தையிலே
நான் படுத்ததில்லை
படுத்திய பின்னும் இன்னும்
ஏனடா தயக்கம்?
முத்தமிடு என்னில்.
இந்த இரவு சுகப்படட்டும்
சோகம் கூட தாலாட்டாய்
எவ்வாறு படிப்பாய்?
உதிரும் பூக்கள் போல் வார்த்தைகளை
கொட்டும் உன் நாவிதழில்
தேன் இருக்குமோ?
உருவமில்லா உன்னை
நினைக்கவே என்னுருவம்
தொலைந்து போனது
என்னை நாளும் தொந்தரவு
செய்வதை நிறுத்து

கேள்விக்கு பதிலாக,
உன் முத்தத்திற்கு என்னால்
முத்தமிட முடியாது
சத்தமில்லாத உலகைப்
படைத்த நீ
என்னைப் போல் எத்தனை
பேரை மயக்க வைத்தாய்!

போர்த்திய போர்வையிலே
நான் அறியாமல்
என்னுள் நுழைந்து
என்னை வாட்டுகிறாய்
இனியும் உன்னுடன் பேசாதிருப்பது
சரியல்ல தானே!

கண்களால் பேசிக்கொள்ள
நம் கண்களும் இல்லை;
உதடுகளால் பேசிக்கொள்ள
என்னுதடும் இல்லை
நினைவுகளாலே பேசுவோம்!!
பொழுது விடியும்வரை
கண்ணுக்கு புலப்படாத நீ
சொல்லாமலே சென்று விடுகிறாய்!
என் நினைவுகளையும்
கலைத்து விடுகிறாய்

கால்களால் இணைத்து
என் கைகளை அணைக்கிறாய்
மூடாத விழிகளில் காண முயலுகிறேன்
இனியும் சொல்வதெற்கென்ன
முடிந்து போகாத என் வாழ்வின்
இளமைக் காதலனே!
உன்னை விட எனக்கு ஆசை
வளர்த்தவர் எவருமில்லை

எழுத முடியாத கவிதையாய்
நாள்தோரும் வாட்டும் உன்
வார்த்தைகள் காற்றோடு
கலைந்து போவது பாவமடா!
நேற்றுவரை நடந்தது
நடந்தபடிதான்!
இன்று நடனமாடு என் முன்
இதோ! என் இதயம்
சபையமைத்துத் தருகிறது
எப்பொழுது வரும் இரவென
பகல் முழுவது நினைத்திருப்பேன்
அட! அதிலும் நீ
முழுவதுமாய் உன்னை
எனக்களித்தா யானால்
எனக்கெதற்கு விழிகளும்
என் இதயமும்.?

கொய்தது பிச்சி @ 2:52 PM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்