பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூநித்திய சூரியன்

ரவுப் பூச்சிகளின்
முதுகில் வெங்கதிர் பாய்ச்சி
கனவைக் கலைத்து
அதன் ஒளியைக் கெடுத்து
ஒளியைக் கொடுக்கும்
வெண்மை மைந்தன்.

மகரந்த விதைகளின்
வீழ்ச்சியினால், சோகமாய்
கண்ணீர் வடிக்கும் பூக்களுக்கு
மெல்ல ஆறுதல் சொல்ல
அள்ளி வரும்
பூக்களின் தலைவன்.

இலைகளின் காதலி
நுனியிதழ் தேவதைக்கு
மறுஜென்மம் நீட்டித்து
தெய்வமாகும்
புற்களின் புதல்வன்.

பூச்சிகளின் பேச்சுவார்த்தைகளை
தினமும் கலைத்து விட்டு
யோஜனை ஏதுமின்றி
குழப்பங்களுக்கு மத்தியில்
அமர்ந்து சிரிக்கும்
சிந்தனைச் செம்மல்.

பின்னிப் பிணைந்திருக்கும்
இரவுப் பிள்ளையின்
நாபிக் கமலத்தை
நிதம் நிதம் அறுத்து
இரவுக்குள் மீண்டும் பிள்ளையாக்கும்
நிலவின் கணவன்.

தனித்தே இருக்கும்
தண்சுடர் காதலியின்
உயிர் கெடுத்து, சிதைத்து,
உயிர்கொடுத்து வாழும்
உன்னதமான நண்பன்.

ஆழ்ந்துறங்கும் மான்களின்
கொம்பு வழி சக்தி புகுத்தி
வம்பு வளர்க்கும்
விலங்கின வீரியன்.

மெய்ஞானத்தின் ஓர் புறத்தில்
மெய்யாகவே அமர்ந்து
பொய்யான வாழ்வுக் கடலில்
மூழ்கி மீன் பிடிக்கும்
மீனவக் குமரன்.

செதில்களின் அசைவுகளில்
தாளம் இசைத்து
கண்களின் வளைவுகளில்
பாடல் பாடும் மீன்களை
மேடை ஏற்றும்
விண்மீன் காந்தன்.

மெல்ல எழும் போது
தன் துணைவியின் நிறம் கலைத்து
நித்திய தரிசனத்தின்
மத்தியில் வந்து வணங்கும்
சத்திய சூரியன்.

இவை எதுவும் பொருட்படுத்தாது
பிளாஸ்டிக் கனவுகளில்
வாழ்க்கை நடத்தும்
செயற்கை மனிதம்.

கொய்தது பிச்சி @ 9:24 AM,

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

<< இல்லம்