பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூமுதல் முத்தம்

ஆற்று மல்லிகைப் பூவெடுத்து
சூடிக்கொண்ட பொன்வேளையில்
ஏங்கி ஏங்கி இத்தனை மாதங்கள்
வீங்கிய வயிறு
வலிக்க ஆரம்பித்தது.

குண்டு மல்லிகை போல
குண்டாகியிருந்த வயிறைப்
பிடித்தவாறே மெல்ல,
இதயம் கனக்க,
சென்றோம் தேவலோகத்து
வைத்தியசாலை.

எங்கோ இருந்து பறந்து வந்த
காதல் பாடல்களின் முதல்வரி
என் காதுக்குள் பாய்ச்சப்பட்டது
என் நெஞ்சம் துடிக்க ,
வைத்தியச்சி என்னைப் பார்த்ததும்
ஒரு ஈசலைப் போல
மனம் கொண்டுவிட்டேன்..

உற்றவன் துணையின்றி
ஓர் அறையில் , அவனால்
மகரந்தம் பூசி வடிக்கப்பட்ட
என் வயிறைத் தொட்டு,
ஒவ்வொரு அரைவினாடியும்
கடவுளை நினைத்து
பெற்றெடுத்தேன்
பூவுக்கும் பூவுக்கும் பிறந்த
பூவேந்தனை.

மீன்களும் கண்டு
தற்கொலை செய்திடும் கண்கள்
கொண்டவனாய் மிளிர்ந்திட்டான்
பூவேந்தன்.
மான்களும் வெட்கித்
தலைகுனியும் மேனி பெற்றிட்டான்
என் மைந்தன்.

அள்ளி அணைத்து
அவனை சூடுகையில்
குளிர்ந்த நீராய்ப் போனது
அப்போதுவரை கொதித்த மனம்.

அவன் இட்ட முதல் முத்தம்
உணர்வுகளின் பொற்குவியல்
அவனுக்கு நான் இட்ட முதல் உணவு
என் பெண்மைக்கே இலக்கணம்.
விழிகளைத் திறக்காமல் தின்றுவிடுவான்
என் வேதனைகளையும் என் ரத்தத்தையும்
அச்சம், மடம், நாணம், பயிர்பு ஆகிய
மொத்தமும் இழந்து தாய்மை ஆனேன்
அவனுடைய முதல் முத்தத்தில்...

கொய்தது பிச்சி @ 9:02 AM,

1 பின்னூட்டங்கள்:

At April 6, 2007 at 6:08 PM, Blogger பாரதி சொன்னது...

அருமை மிக அருமை கவிதாயினி.

 

Post a Comment

<< இல்லம்