பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூ



மழை

உடைந்துபோன முகிலனிடமிருந்து
பொடிப் பொடியாய் வீழ்கிறாய்
விண்ணிலிருந்து நேராய்
மண்ணுக்கு.
எங்காவது உடைந்த பொருள்கள்
உதவுமா மனிதத்திற்கு?
உடைந்த குழல்
ராகமிட்டதுண்டா?
நீ வாசிக்கிறாயே!

உன் ஒரு துளியை
இரு பிளவாக்கி
ஒன்றில் ஆன்மீகமும்
மற்றொன்றில் அற்பாசையும்
பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது
என்னால் மட்டுமே உணரமுடியும்
யாருக்கு வழங்குவது
யாருக்கு விடுப்பது
என்று நீ புலம்புவது...
உன்னையறியாமல் ஆத்மா
செல்லுகிறது எல்லாருக்கும்!

விழுந்து தெறித்த உயிரிலிருந்து
பல உயிர்கள் பிரித்து
மண்ணிலே அழுகிறாய்
அந்த உயிர்களில்
ஒரு உயிராவது
எனக்கு அறிமுகம்
செய்யமாட்டாயா?
ஆன்ம உணர்வின்றி தவிக்கும்
ஜென்மங்களுக்கு உதவுகிறாய்!
நண்பனை அறிமுகம் செய்யமாட்டாயா?

இரு துளிகளின் ஊடலில்
பிரிந்து இன்னொரு துளி
விழுந்துவிடுமே!
அதை என் கையில்
இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்
கன்னத்தில் வழிந்தோடும்
கற்பனையாக அதைத்
துடைத்துக் கொள்வேன்
நீ வெகுளித் தனமான
முகத்தால் சிரித்திடுவாய்

என் கரங்களின் அழுக்குகள்
மென்று தின்றுவிடுவாய்!
முகத்தின் முடிச்சுகளை
மெல்ல அவிழ்திடுவாய்
என் அதரத்தில்
ஒரு முத்தம் தருவாய்
அங்கே வெடித்துப் போன
சில வரிகளை
முத்தத்தாலே வைத்தியம் செய்வாய்

சில வேளைகளில்
நான் இன்புறும்போது
கூந்தலை விரித்து
சகதியில் ஆடுவேன்
இச் இச் என்று
தலையில் கொட்டுவாய்
என் கூந்தல் இழையில்
வழிந்தோடும் ஓர் துளியைக்
கண்டு ரசிப்பேன்
காலமெல்லாம்

பின்னிரவில்
தொந்தரவு செய்திடுவாய்
நோயாக
மீண்டும் என் பற்கள்
தெரிய சிரிப்பேன்
உன்னுடன் கூத்தாடியதை நினைத்து

அன்றிலிருந்து
இன்றுவரை
என் நண்பனாக
காதலனாக
கணவனாக
என் துப்பட்டாவின்
நரம்பில் தங்கி
இதயத்தின் கதவு வழி
செல்கிறாய் ஆத்மாவினுள்

உனக்கொரு உருவமிருந்தால்
மழையே!
உன் இதயத்தை பிடித்து
தொங்குவேன்
பூட்டிவிடுவாயா எலும்புகளை வைத்து?


கொய்தது பிச்சி @ 7:41 PM,

1 பின்னூட்டங்கள்:

At February 8, 2007 at 11:08 AM, Blogger Ken சொன்னது...

"இரு துளிகளின் ஊடலில்
பிரிந்து இன்னொரு துளி
விழுந்துவிடுமே!
அதை என் கையில்
இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்"

நன்றாய் இருக்கிறது பிச்சி

 

Post a Comment

<< இல்லம்