பூந்தோட்டம்: பிச்சிப்பூ | என் லோகம் | எனது பூவிதழ் | தொடர்பு

 

இது ஒளியில்லா பேதையின் கவிதைத் தொகுப்பு.. மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு பூவின் வாசனையை நுகருங்கள் இங்கே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் பூத்துக்கொண்டே இருக்கும் பூந்தோட்டம் இந்த வலைப்பூஅவள்

காதல் உணர்வுகளுடன்
காற்றை மெல்ல விழுங்கும்
பூக்களின் ராஜ குமாரி அவள்!

மெல்ல ஒளியிழந்து
சாயம் கலைந்த
சாயுங்கால நிலவுக்கு
பாலூட்டும் அன்னை அவள்!

வலியேதும் இல்லாமல்
புன்னகையும் சிதறாமல்
புற்களின் மேல் நடக்கும்
பூச்சிகளின் ராணி அவள்!

சிதறிய தானியங்களை
கொத்தித் தின்னும்
கோலவிழி மென் குயிலினும்
மென்குரல் கொண்ட
பெண்குயில் அவள்!

பாலைநிலப் பூக்களை
சோலை நிலப் பூக்களாய்
மாற்றி, புத்துணர்ச்சியாய்
காட்சிக்கு காட்சி
விருந்தளிக்கும் ஏந்திழை அவள்!.

நிதம் நிதம் என்னைப் பார்த்து
வெட்கிக் குனிந்து
மண்ணின் மடியில் சரியும்
பூங்குறுநல் பூங்கா அவள்!

மின்னிய மின்னல்களின்
சிதைவில், சிதையாமல்
தோன்றிய
மின்னல்கொடி அவள்!

பிக்காசோ கைகளில்
விசித்திர வண்ணம் பாய
நிழலாய் சிரிக்கும்
சித்திரம் அவள்!

கண்களில் நடனமிடும்
காவியத் தலைவியும்,
கோவலனின் காதலியுமான,
கண்ணகியின் சலங்கை அவள்!.

காதல் இறகுகளாய்ப்
பறந்து, பார்வதியின் கூந்தலில்
சிக்கிச் சிரிக்கும்
புஷ்பவதி அவள்!

அண்டார்டிகா வெப்பத்தில்
அலைந்து திரியும்
குளிர் பறவைகளையும் விட
நயனமான பெண்கரடி அவள்!

நிலத்தில் ஊடுறுவி
அழகுக்கு முளைத்திடும்
மங்கள மஞ்சளிலும்
இணையில்லா வர்ணம் அவள்

தரித்திர வாழ்வினிலும்
என்னைப் பார்த்து வியந்து
சிரித்திடும் அழகு ஓவியம்
அவள்.

அவள் அவள் என்று
அழைத்தது
அன்னையைத் தான்
அவள் எனக்கு என்றும்
அழகிதான்.

கொய்தது பிச்சி @ 9:24 PM, ,
கற்சிலைக் காதல்.....

ருத்திர வீணைக் கம்பிகளின்
இறுக்கமான நிலையில்
நெருக்கமாக பாடப்படும்
முகாரி ராகத்தில்
காதல் பாடுகிறது
இதயத்திற்கும் இதயத்திற்கும்
இடையேயான
இன்பப் பாடல்

அகிலமெல்லாம் காற்றாய்
வியாபித்திருக்கும் காதலின் பாடலில்
ஏழு ஸ்வரங்களும்
தனித்தனியே கழன்று ஓடுகிறது
காதலர்கள் எனும் ஊடகத்தில்

ஒவ்வொரு இரவும்
சூரியனின் நயன் மோட்சத்திற்கு
காத்திருப்பதுவாக
காதலின் பாடல் காத்திருக்கிறது
கற்களின் வலிமையாக.....

முகிலெழுப்பிய நுண்ணிய துளிகளின்
சத்தம் கேட்டு
துரித நடவடிக்கையாக
கற்சிலை பாடல்கள்
கலைந்து போகிறது.
பரிபூர்ண மோட்சம்
விழிகளில் தெரிகிறது

அண்டங்களின் பேருடைப்பும்
பிரளய சத்தமும்
பிணைந்து போன கோள்களின்
வெடிப்பும், வெறும்
பிண்டமாகப் போகிறது
பாடல்களின் உச்ச ஸ்துதியில்

நீர் கோத்து நிற்கும்
நெஞ்சங்களுக்கு இமைகளுக்கு
மத்தியில் பொதிந்துவிட்ட
இப்பாடல், சூடேற்றி
வற்றச் செய்யும் நீரூற்றை..

பூங்கா ஓரத்து நிழல்களில்
ஒதுங்கியிருக்கும் புல்களுக்கும்
இசைக்கும் பாடலால்
தைரியமுண்டாகும்
தன் சாதலைத் தேட!

வடித்தவன் கைவிரல்
பொன்விரல்
படித்தவன் கண்ணிமை
காதல்
உயிருள்ள ஜடமாய்
உலாவிக் கொண்டிருக்கும்
உண்மைக் காதலாய்
இருவரின் பாடல்கள்
கற்சிலையாக இங்கே!!

கொய்தது பிச்சி @ 9:22 PM, ,
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 5

எட்டிப் பார்த்த
இரு விழிகளின் நரம்புகள்
என் குத்தல் பார்வையில்
விழி நடுங்கிப் போயின

மரண வேதனை நிகழும்
நெஞ்சாய் உருமாறிக்
கொண்டிருந்த அவன் நெஞ்சில்
துர்நாற்றம் வீசியதைக்
கையால் தடவிப் பார்த்தான்.

ஏந்தெழில் மேனியென் மேனி
போர்த்திய சீரைக்குள்
ஒளிந்திருக்கும்
பூந்தளிர் மனதினை,
நரம்புகளை அம்பாய்க் கோர்த்து
புதைத்திடத்தான் எய்தினான்.

பள்ளியெழுந்த கண்களும்
காணும் தெளிவாக, அவன் பார்வை
துள்ளியெழுந்த இமை முடியும்
தூங்கிவிடும் தாக்குதலில்.
துஷ்டனே என
துர்வாசன் சாபமிட்டாலும்
சிரித்துக்கொண்டுதான் இருப்பான்
புழுக்கள் நெளியும் பற்களோடு..

குடல்பிடுங்கும் வாசனை
நாசியில் ஊற,
மெல்ல எழுந்து வந்து
நெஞ்சைக் கீறிய கைகளால்
தொட்டுப் பேசிட முனைந்தான்.

புழுக்களின் அடுக்கடுக்கான
மேனியும் அழகு என்று
பூச்சிகள் பயணித்திட முடியுமா?

வாயிலிருந்து வெளியேறும்
எச்சில், நூல்களை விட
மெல்லிய இழையென்றாலும்
ஆளையே கொல்லும் விஷமல்லவா?

ரெளத்திரம் கண்களில் ஏற
சிவந்துபோன நரம்புகளின்
வெடிப்பில், நிலைகுலைந்து
நினைவு மலுங்கிப் போனான்.

மின்னலின் தடம் பற்ற
முடியாது யாராலும்
இன்னலின் தடம் பற்றிட
முடியும் யாராலும்.
இவன் வினாடி நேரத்தில் என்னை
அடையப் பார்க்கிறான்
நான் கொட்டிய உதிரத்தை
கண்களில் வீசிடவே பார்க்கிறேன்.

கொய்தது பிச்சி @ 9:19 PM, ,
சாகரன் அண்ணாவுக்கு கவியஞ்சலி

பூசி மெழுகப் பட்ட அழகு
நெருப்புக் கனலுக்குள்
தண்மை வாய்ந்த துளிகளை
இட்டு அணைக்கிறாயே
தேவலோகத்து அற்ப மானிடனே!

கசந்து போன மாலையில்
அமர்ந்து கொண்டு
நாற்றங் கமழும் பூக்களின்
மத்திய இடைவெளியில்
கோரப் பற்கள் தெறிக்க
சிரிக்கிறாய்; இங்கொரு
ஈர உயிரை எடுத்து விட்டு..

உதடுகளின் அலையில்
குருட்டு பாஷை போட்டு
வெடித்துப் போன காயங்களுடன்
உறவாடும் நீசர்களுக்கு மத்தியில்
தடாகத் தாமரையாய்
பரந்து விரிந்து
மலர்ந்த ஒரு புஷ்பத்தை மட்டும்
உருவிக்கொண்டாய்
பார்வையில் நரம்புகளின்றி..

சாகிறேன் என்று
எந்த குயிலாவது பாடுமா?
செவிட்டுத் தனமான உனக்கு
கேட்டதா புரியாத ராகங்கள்?
சாகரனைத் துலைத்துவிட்டாய் பூமியில்
துளிகூட அர்த்தமின்றி..

காதுவழி நெருப்பு
பாய்ந்ததும்
கண்களில் நீர்த்துளிகள் கோர்க்கிறது
ஈரம் உன் நெஞ்சில்
அப்பியிருந்தால்
ஈனச் செயல் செய்திருப்பாயா?

பூக்களில் உள்ளம் சமைத்த
நேர்த்தியான மஞ்சள் முகத்தில்
இரத்தமே உயிரெனத் தூண்டும்
பொட்டு வைத்து
வண்ண சேலைகளின் அணிவகுப்பில்
வண்டுகளும் காய்ந்து போகும்
அண்ணிக்கு (சாகரன் அண்ணாவின் மனைவி)
அலங்காரக் கெடுதி செய்து
கொலைகாரனானாய்...

நெருப்பில் கொதிக்க வைத்த
இதயத்தைக் கொண்ட உனக்கு
எங்களின் எச்சரிக்கைகள்

தவிழ்ந்து வரும் குழந்தையைத்
தட்டிவிட்டு கொன்றாய்
விடிந்து வரும் ஒரு பகலை
குத்திக் குத்தி தொளைத்தாய்
கோரங்களின் அதிகரிப்பில்
எங்கள் ஆக்கங்களே
உன்னை சபிக்கும்
சாகரன் மட்டும் மீண்டும் வந்தால்
உன் வாழ்வு எம்மிடமிருந்து தப்பிக்கும்...

கொய்தது பிச்சி @ 8:37 PM, ,


எனக்கு ஊக்கமளித்த ஈழத்து (கவிஞை) சகோதரியைப் பற்றிய கவிதை.....

அத்திப்பூவின் அடிவயிறைத்
தொட்டுப் பார்த்து
நறுமணத்தின் அந்தரங்கங்களை
அறிந்து கொண்ட வெண்புறா

அவலட்சணத் தாமரையை
அள்ளியெடுத்து தன்
மென்கரங்களில் தொட்டுத் துலாவி
ஸ்பரிசக் காற்றாலே
சொரூபமாக்கும் ஆற்று மல்லிகை!

அவனியெங்கும் அலைந்து திரிந்து
காலவரையறையில் கூட்டுக்குள் நுழைந்து
புதுரகக் குருவியாக, கிடைத்த் இரைகளை
மரத்தில் இரைக்கும் ஈழத்து மண்கொடி

குறிஞ்சிப் புஷ்பத்தின்
புணர்ச்சியை
நெருக்கத்தில் கண்டுவிட்டு
அதன் சூட்சுமத்தை
உலகிற்களித்த பைங்கொடி

வல்லின வார்த்தைகளின்
பொருட்சிதைவைக் கண்டு
இனி மெல்லினமே என்றும்
சிறந்ததாய்க் கவி கொடுக்கும்
அதியற்புத கவிமங்கை

முரித்துவிட்ட அம்புகளின்
சிதறல்களை மூச்சுக்காற்றால்
ஒட்டி வைத்து, சிகையிழையின்
முடிச்சுகளால் கட்டி வைத்த
தேவலோகத்துப் பதுமை!

மேல்நோக்கிய விழிகளைக் காட்டி
மிளகுச்சாற்றின் கசப்புகளை
ருசித்து விட்டு, அது இனிப்பேதான்
என்றுணர்த்திய வீரியஅழகி

எங்கள் காய்ந்த மல்லிகையை
வரிகளாலேயே புதுப்பிக்கிறாய்
ஒடிந்துபோன முல்லையை
தடவித் தடவியே ஒட்டுகிறாய்

பூந்தோட்டத்தில் ஒரு ராணியாக
பூக்களைப் பிரசவிக்கிறாய்
எம் சருகுகளையும்
காலத்தடத்தால் மெய்ப்பிக்கிறாய்

வாழ்க என் சகோதரியே!
உன் வயதை குறிஞ்சுப்பூவாய் நினைத்துக் கொண்டு
ஆயிரம் பூக்கள் மலரக் கண்டு
வாழ்வாயே!!!!


கொய்தது பிச்சி @ 9:11 PM, ,
என்னைப் பற்றி......

புறவிதழ் ரணம்படியா
பொற்றாமரைக் கூந்தல்!
கொடியிடைக் கோலம் கண்ட
பித்திகப் பூங்குறுநல்.

செவ்வானத்தடி குமுறலில்
புதிதாய் முளைத்திட்ட
நறுமுகையின் மறுபிரவேசம்!
எத்திசை வைத்தாலும்
கால்தடத்திலேயே ஓவியம் படைக்கும்
ரவிவர்மாவின் சொப்பன நாயகி!

மலடற்ற இதயத்தைக்
காணவைத்தே புன்னகையின்
நெஞ்சை நெக்கும் கொடிமுல்லை!
காயமின்றி கால்மடக்கி
நறுமணத்தைச் சூழ்ந்து
பூமீதேகிய பூக்களின் பிள்ளை.

முடியிழைத் தவறலில்
ஏங்கிய மல்லிகைக்கு
மூச்சுக் காற்றால்
வாசனை தந்த நீரூற்று.
இனியில்லை என்று
இலைகளைக் கொட்டிவிட்ட
தவிட்டுமரத்திற்கு
ஸ்பரிசத்தாலே உயிர்கொடுத்த
மென் காற்று.

அறுபதினாயிரம் ராகங்கள்
தோற்கும் அதி அதிசய ராகம்!
இசைத்திடவே பிரம்மன்
அசைக்கும் கண்ணனின்
புல்லாங்குழல்....

கதிருக்குள்ளும்
காதலுக்குள்ளும்
புதிருக்குள்ளும்
ஈதலுக்குள்ளும்
ஒளிந்திருக்கும்
ஓர் நிஜமான கற்பனை......

நான்....
நானேதான்......


கொய்தது பிச்சி @ 7:39 PM, ,
மழை

உடைந்துபோன முகிலனிடமிருந்து
பொடிப் பொடியாய் வீழ்கிறாய்
விண்ணிலிருந்து நேராய்
மண்ணுக்கு.
எங்காவது உடைந்த பொருள்கள்
உதவுமா மனிதத்திற்கு?
உடைந்த குழல்
ராகமிட்டதுண்டா?
நீ வாசிக்கிறாயே!

உன் ஒரு துளியை
இரு பிளவாக்கி
ஒன்றில் ஆன்மீகமும்
மற்றொன்றில் அற்பாசையும்
பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது
என்னால் மட்டுமே உணரமுடியும்
யாருக்கு வழங்குவது
யாருக்கு விடுப்பது
என்று நீ புலம்புவது...
உன்னையறியாமல் ஆத்மா
செல்லுகிறது எல்லாருக்கும்!

விழுந்து தெறித்த உயிரிலிருந்து
பல உயிர்கள் பிரித்து
மண்ணிலே அழுகிறாய்
அந்த உயிர்களில்
ஒரு உயிராவது
எனக்கு அறிமுகம்
செய்யமாட்டாயா?
ஆன்ம உணர்வின்றி தவிக்கும்
ஜென்மங்களுக்கு உதவுகிறாய்!
நண்பனை அறிமுகம் செய்யமாட்டாயா?

இரு துளிகளின் ஊடலில்
பிரிந்து இன்னொரு துளி
விழுந்துவிடுமே!
அதை என் கையில்
இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்
கன்னத்தில் வழிந்தோடும்
கற்பனையாக அதைத்
துடைத்துக் கொள்வேன்
நீ வெகுளித் தனமான
முகத்தால் சிரித்திடுவாய்

என் கரங்களின் அழுக்குகள்
மென்று தின்றுவிடுவாய்!
முகத்தின் முடிச்சுகளை
மெல்ல அவிழ்திடுவாய்
என் அதரத்தில்
ஒரு முத்தம் தருவாய்
அங்கே வெடித்துப் போன
சில வரிகளை
முத்தத்தாலே வைத்தியம் செய்வாய்

சில வேளைகளில்
நான் இன்புறும்போது
கூந்தலை விரித்து
சகதியில் ஆடுவேன்
இச் இச் என்று
தலையில் கொட்டுவாய்
என் கூந்தல் இழையில்
வழிந்தோடும் ஓர் துளியைக்
கண்டு ரசிப்பேன்
காலமெல்லாம்

பின்னிரவில்
தொந்தரவு செய்திடுவாய்
நோயாக
மீண்டும் என் பற்கள்
தெரிய சிரிப்பேன்
உன்னுடன் கூத்தாடியதை நினைத்து

அன்றிலிருந்து
இன்றுவரை
என் நண்பனாக
காதலனாக
கணவனாக
என் துப்பட்டாவின்
நரம்பில் தங்கி
இதயத்தின் கதவு வழி
செல்கிறாய் ஆத்மாவினுள்

உனக்கொரு உருவமிருந்தால்
மழையே!
உன் இதயத்தை பிடித்து
தொங்குவேன்
பூட்டிவிடுவாயா எலும்புகளை வைத்து?


கொய்தது பிச்சி @ 7:41 PM, ,
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 4

காற்றின் சலனத்தில்
காய்ந்தாடும் வேள்விழியை
கசந்துபோன ரசங்களைக் கொண்டே
கையாடுகிறாய்

சருகுகளின் சந்தடியில்
அவித்துப் போன செவியை
வைத்துக் கொண்டு
புன்னை மரத்து இலைகளின்
துளிர்ப்பாய் ஜீவிதம் கொள்ளூம்
உனக்கு விழிப்படலத்தில்
விழுந்தவைகள் சொர்ணமா?
காட்சிப் பிழையில்லாத வர்ணமா?

நீ காண்வதெல்லாம்
பூவின் கலசம் என்று
அறியும் போது
என் கருவூல இதயம்
கொள்ளைகொள்கிறது..
தோட்டத்துப் பாதையில்
பூஞ்சருகுகள் இருக்கலாம்
சப்பாத்திப் பூக்கள் இருக்கலாமா?
குத்திய வேதனைகள்
வெள்ளை இறகுகளுக்குத் தெரியும்
வர்ண குருதியாக
உன் மனதை மட்டும்
கொடூரமாய் வைத்துக்கொண்டாய்
மறதியாக.....

உன் பாடக் குறிப்புகளில்
a+b = ab என்றும்
என் பாடக் குறிப்புகளில்
a>b என்றுமே
எழுதப்பட்டிருக்கிறது.
உன் குறிப்புகள் தவறா?
என் கணிப்புகள் தவறா?
எட்டிப் பார்க்கும்போது
பார்வைக் கோளாறாக
என்றுமே உனக்குத் தெரிகிறது
a+b = abc
தோண்டிய குறிப்புகளை விடு
அல்லது
விஷமிழந்த கள்ளிச் செடியாக
அழுதிடுவேன் வர்ணமற்ற ரத்தத்தோடு
எண்ணுவதை விடு
நாட்களையும்
என்னையும்.....


கொய்தது பிச்சி @ 6:35 PM, ,
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 3

 கீழ்நோக்கிய
தென்னங்கீற்றின்
ஓர் காய்ந்துபோன மூலையில்
படர்ந்து கொண்டிருக்கும்
புழுதியினைப் போல்
நெளியாது, வழியாது
உறங்கிக் கொண்டிருக்கிறது
நெஞ்செலும்பில்லாத
ஓர் புழு

மாலைச் சூரியனைத்
தன் ஓரக் கண்ணால் சிமிட்டும்
கீத்துக் கீத்தாக கிழிந்து
அதேசமயம் அழகாய் வடிந்து
இருக்கும் இரு இலைகளின் மேல்
முள் பாதுகாப்பில் விழித்திருக்கும்
ஒரு சிவப்பு நிற மெல்லிதழ்

மெல்லிய இச்சைக் காற்றின்
ஊதலில், நிசப்தமாய்
இயற்கையின் காகிதமான
இதழ்களில் விழுந்து
அலைகிறது; துலாவுகிறது
இந்தப் புழு
எங்காவது தேன் இருக்குமா என்று!

மெல்லிதழ்கள்
புழுக்களின் ஊரலில்
காயமாகாது
காற்றைத் துணைக்கழைத்து
வீழ்த்திவிடும் எண்ணத்தோடு
சிரித்து மகிழ்கிறது
முற்களைச் சூழ்ந்து வைத்திருக்கும்
பல இதழ்களின் தொகுப்பு.

என்றுமே மீண்டும்
எட்டிப் பார்க்க நினைக்கும்
குலைந்துபோன சேற்றின்
உருவங்களை
ஒதுக்கி வைத்து வாழ
நினைக்கும் பூவின் வாசனை

ஒளியில்லா பேதையினை
சீண்டுவது
நெருப்பின் நுனியில்
வேக வைத்த புழுவாய் போகும்

புழுக்களே!
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்காதீர்கள்
உங்களின் கண்கள்
நித்திய சூரியனின் அனலில்
காணாமல் போய்விடும்


கொய்தது பிச்சி @ 10:30 PM, ,